ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாத திருவிழா தரிசன நேரத்தை மாற்ற பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழா தொடங்கியது.
இராபத்து திருவிழாவில் முதல் நாளான ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையும், மற்ற கோவில்களில் இரவு 7 மணி வரையும் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் கோவிலில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் இரவு 11 மணிக்கும், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆழ்வார் திருநகரி கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். சயன திருக்கோலத்தில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் மதியம் 1.30 மணி வரைகாட்சியளிப்பார் என கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆழ்வார்திருநகரில் செய்தியாளரிடம் கூறுகையில்:-
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலம் காலமாக பின்பற்றி வரும் தரிசன நேரத்தையும், சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தையும் மாற்றி அமைக்க கூடாது. நவதிருப்பதிகளில் கடைசி கோவிலான ஆழ்வார் திருநகரி வரும்போது மாலை வரை சயன கோலத்தில் சுவாமி இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைகுண்ட ஏகாதசிக்கு நவதிருப்பதி கோவிலுக்கு வந்து செல்லும் நிலையில் மதியம் 1.30 மணிக்கே சயன கோலம் முடிவிற்கு வந்தால் பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு இரவு வரை சயன கோலத்தில் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். பக்தர்களின் எதிர்பார்ப்பை மீறி தரிசன நேரத்தை மாற்றி அமைத்தால் வருகிற 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும் 30ஆம் தேதி முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என்றார்.
இந்த பேட்டியின் போது, மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், நகரத் தலைவர் பட்டாபிராமன், துணைத்தலைவர் கண்ணன், ஒன்றிய தலைவர்கள் முத்துக்குட்டி, அம்பஸ் ராஜா, பிரச்சார பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மணவாளன், ஆலய மேம்பாட்டு துறை மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மாவட்ட செயலாளர் வினோத், தமிழ் இலக்கிய பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகா சரவணன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.