சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை நாளை ( 23.12.22 ) 8 மணிக்குள் கைது செய்யவில்லை என்றால் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிடுவோம் என தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடிகளை மர்ம நபர் சிலர் இன்று ( 22.12.22 ) அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சசிகலா புஷ்பா வீடு முன்பு திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலை 3 வது மைல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் கூறியதைத் தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு, சிறிது நேரம் அங்கு அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்:-
பாஜக வினர் விமர்சனங்களை பொறுத்து கொள்ள முடியாத திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதில் சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எங்களிடம் தெரிவித்ததையடுத்து, தற்போது நடக்க இருந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டுள்ளோம்.
நாளை ( 23.12.2022 ) காலை 8 மணிக்குள் சம்மந்தபட்டவர்களை கைது செய்யாவிட்டால், இரண்டாயிரம் பாஜக தொண்டர்களோடு அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுகிறோம் என அவர் தெரிவித்தார்.