தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடிகள் அடித்து சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி பி & டி காலனி 8 வது தெருவில் உள்ள முன்னாள் எம்பியும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீட்டின் ஜன்னல் கண்ணாடி, பூந்தோட்டி மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உள்ளிட்டவைகளை இன்று (22.12.2022 ) பிற்பகல் மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக நிர்வாகிகளும் வீட்டின் முன் கூடி வருவதால் அப்பகுதி பரபரப்பாக கானப்படுகிறது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திமுக மற்றும் அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை சசிகலா புஷ்பா எச்சரிக்கும் விதமாக பேசியதை தொடர்ந்து, இன்று சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடிகள் அடித்து சேதப்படுத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.