தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கீதா ஜீவனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பெரியசாமி மனைவி எபனேசர், மகன்கள் ராஜா, தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், தற்போது அமைச்சராக உள்ள மகள் கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதன் பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கீதா ஜீவன் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர் மீதான சொத்து குறிப்பு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ( டிச, 15 ) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் தந்தை பெரியசாமி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தந்தை உட்பட குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நியாயம் கிடைத்துள்ளது. நீதி வென்றுள்ளது என்றார்.
இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கம் முன்பு மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் இனிப்பு வழங்கி தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்தனர். இதில், மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயக்குமார், கந்தசாமி, வட்ட செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.