தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார் என்பது வழக்கு. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2-வது என்.பெரியசாமி மனைவி எபனேசர், 3-வது மகன் ராஜா, 4-வதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதன்பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கீதா ஜீவன் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் நீதிபதி குருமூர்த்தி இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறார்.
இந்த நிலையில்தான் இன்று கீதா ஜீவன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமைச்சராக உள்ள கீதா ஜீவன், தூத்துக்குடி மேயராக உள்ள அவரது சகோதரர் ஜெகன் பெரியசாமி ஆகியோரது அரசியல் எதிர்காலத்தை இன்றைய தீர்ப்பு தீர்மானிக்க உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கீதா ஜீவனுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். இதனால் அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும். உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகும் நாளில் இப்படி நடந்துவிடக் கூடாது என்கிற பதற்றத்தில் இருக்கின்றனர் திமுக.