தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர். மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பதோடு குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். "
விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தினை நிறைவு செய்து, தாங்கள் பயிலும் பள்ளி/ கல்லூரியிலிருந்து உரிய அனுமதிச் சான்றிதழ் பெற்று, 3 புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 20.12.2022க்குள் அனுப்ப வேண்டும்.