தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபிநபு இ.கா.ப 2020ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உடனிருந்தார்.
ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்டம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.