விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்று மாயமானவர் இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யப்பராஜ்(35). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
அய்யப்பராஜ் கடந்த 27-ம் தேதி விவசாய நிலத்தில் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணிக்குச் சென்றவர், பணி முடிந்ததும், அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதனையடுத்து அவர்கள் அனைவரும் அக்கிராமத்தில் உள்ள கண்மாய்க்குக் குளிக்கச்சென்றுள்ளனர்.
கண்மாயில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென அய்யப்பராஜ் கானாமல் போயிட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் குளித்துக்கொண்டிருந்தவர்கள் கண்மாயில் அவரைத் தேடியுள்ளனர். ஆனால் அய்யப்பராஜ் கிடைக்காததால், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் கண்மாயில் இறங்கி தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து தேடி வந்த நிலையிலும் அயப்பராஜ் கிடைக்காததால் நேற்று தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு தேடினர். அவர்களின் தேடுதல் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், 2 நாட்களுக்குப் பின் இன்று அதிகாலை கண்மாயில் அய்யப்பராஜின் உடல் மிதப்பதைக் கண்ட கிராம மக்கள் எப்போது வென்றான் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் கண்மாயில் சடலமாக மிதந்த அயப்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எப்போதும்வென்றான் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்மாயில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.