சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது, மே 22 - 2018 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 40 பேருக்குப் பலத்த காயமும் 64 பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அக்டோபர் 18 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவலர்கள், உத்தரவிட்ட உயரதிகாரிகள் ஆகிய அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே உயிரிழப்புகளை எதிர்கொண்ட குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு. அருணா ஜெகதீசன் ஆணையமும் குற்றவியல் நடவடிக்கைக்கான முகாந்திரத்தை நிராகரிக்கவில்லை. ‘குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்’ என்று முதல்வர் கூறியிருப்பது நம்பிக்கை அளித்தாலும், முதல்வரோ அரசுத் தரப்பிலிருந்தோ குற்றவியல் நடவடிக்கை குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து 23-11-22 அன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரையும், 24-11-22 அன்று மாவட்ட ஆட்சியரையும் சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் என மூன்று அமைப்புகளும் இணைந்து "ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டடைப்பு" என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.
இந்த ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற 12-12-22 (திங்கள் கிழமை) மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டிருந்தாலும், அதனை நிரத்திரமாக அகற்ற சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்றி நடைமுறை படுத்தினால் மட்டுமே பொதுமக்களின் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் முழுமை பெறும் என்கின்றனர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராளிகள்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஒருபோதும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான அனுமதிக்காது என்று பல்வேறு ஊடகங்களுக்கு பல முறை பேட்டியின் வாயிலாக கூறி வரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்தோருக்கு முழுமையான நியாயம் கிடைப்பதை உறுதிசெய்து, திமுக அரசின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையை வலுப்படுத்துவாறா என்பதை பொறுத்திருத்து தான் பார்க்க வேண்டும்.