தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் நலன் கருதி கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க கோரியும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் மாவட்ட ஆட்சியருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
மாப்பிள்ளையூரணி ஊராட்சியானது சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியின் நுழைவு பகுதிகளான வடபுறம் தேசிய நெடுஞ்சாலையான கோமஸ்புரத்திலிருந்தும் தென்புறம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி எல்லை பகுதியான சத்யா திரையரங்கம் மற்றும் பாண்டியாபுரம், மேற்கு பகுதி எட்டையாபுரம் சாலை பகுதி வழியாகவும் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை வழியாக காலை நேரங்களில் கனரக வாகனங்கள் மிக அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீபத்தில் இந்த சாலைகளில் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் வெவ்வேறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆகவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் மேற்கூறிப்பிட்டுள்ள சாலை வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேலும் அப்பகுதியில் காலை நேரத்தில் போக்குவரத்து காவலரை பணியமர்த்தி போக்குவரத்தை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.