குளத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு எச்.சி.எல் நிறுவனம் சார்பில் ஊட்டச்சத்து வழங்கும் முகாம் நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் துறை சார்பாக பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உயரம் மற்றும் எடை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று, ஊட்டச்சத்து உணவு குறைபாட்டை கண்டறிதல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து முகாம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில், மாவட்டத்தில் முதல்முறையாக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ஊட்டச்சத்து முகாம் நடந்தது.
முகாமிற்கு, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வ பாண்டி தலைமை வகித்தார். கோவில்பட்டி ஆர்.டி.ஓ., மகாலட்சுமி, விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜ்ஜூன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து லட்டு வழங்கினார்.
குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உண்ணும் உணவு குறைவானதாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை தாய்மார்கள் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரிவிகித உணவு பழக்கத்தை பழகிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தொடர்ச்சியாக குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புசத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இருக்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து குழந்தைகள் விரும்புகிற வகையில் சமைத்து கொடுப்பது அவசியம் என்றார்.
இந்த ஊட்டச்சத்து முகாமில், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு 21 நாட்களுக்கு, காலை 9-மணிக்கு ஊட்டச்சத்து லட்டு, 11-மணிக்கு முருங்கை சூப்,12:15-மணிக்கு நெய் கலந்த சாதம்,முட்டை, 3:30-மணிக்கு ஊட்டச்சத்து பானம் வாழைப்பழம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.