• vilasalnews@gmail.com

வாழ்த்திற்கு மகிழ்ச்சி... உண்மையான கொண்டாட்டத்திற்கு கனிமொழி எம்பி வழிவகை செய்வாரா?

  • Share on

அநீதிக்கு எதிராக பேனா முனை கொண்டு, அறம் சார்ந்த போரை ஒவ்வொரு நாளும் ஜனநாயக சமூக களத்தில் நின்று போராடும் ஒவ்வொரு சாமானிய பத்திரிக்கையாளர்களையும் கௌரவப்படுத்தி அங்கீகரிக்கும் விதமாக, தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில், தமிழக முதல்வர் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர்களும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது மகிழ்ச்சியை தருகிறது.

ஆனால், தேசிய பத்திரிகையாளர் தினத்தில் வழக்கம் போல பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்று சம்பிரதாய நிகழ்வாக நின்று விடாமல், தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள், அடிப்படை உரிமைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தலாக இருக்க முடியும்.

இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படக்கூடிய பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, இலவச இணைய வசதியுடன் மாநகரின் மைய பகுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான தனி பணி மற்றும் ஓய்வு அறை கட்டிடடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களுக்கு தீர்க்கப்படாத கோரிக்கைகள் இருந்து வருகிறது.

இதன் மீது தனி கவனம் செலுத்தி, தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் அவைதான் தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களுக்கு உண்மையான ஒரு கொண்டாட்ட தினமாக இருக்கும்.

ஆகவே, வழக்கமான வாழ்த்து சொல்லி கடந்து விடாமல்,  தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்மையான ஒரு பத்திரிகையாளர் தின கொண்டாட்டத்தை தூத்துக்குடியில் ஏற்படுத்தி தருவாரா தமிழக ஆளும் கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி?

  • Share on

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 இலட்சம் வரை கடன் உதவி - மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவர் கைது!

  • Share on