• vilasalnews@gmail.com

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 இலட்சம் வரை கடன் உதவி - மாவட்ட ஆட்சியர் தகவல்!

  • Share on

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 இலட்சம் வரை கடன் உதவிவழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "VIRASAT" என்ற கடன் திட்டத்தினை தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை டாம்கோ நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

கைவினைஞர்களின் செயல் மூலதனத்தை கருத்திற் கொண்டு கைவினைப்பொருட்கள் வாங்குவதற்காகவும், தொழில் செய்வதற்கும் கடனுதவி ரூ.1இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும், கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக "USTTAD'" திட்டத்தின் கீழ் நடைபெறும் கண்காட்சியில் பங்குபெற முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும்

நிதிக்கழகம் 90% (NMDFC), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் 5%(TAMCO) மீதமுள்ள 5% விண்ணப்பதாரரின் தொகையும் அடங்கும். கடன்தொகை திரும்ப செலுத்துவதற்கான உச்சபட்ச கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். 

தகுதிகள்:

கடன்தொகை பெற சிறுபான்மை பிரிவைச் சார்ந்த இசுலாமியர்,கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர் 18 வயதுமுதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/- நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000/இருக்கும் பட்சத்தில் வட்டி விகிதம் பெண்களுக்கு 4%, ஆண்களுக்கு 5% ஆகும். தவிர,ஆண்டு வருமானம் கிராமம் (ம) நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.8,00,000/- இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு 5% வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 6% வட்டி வீதத்திலும் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

சாதிச்சான்றிதழ் நகல்,வருமானச் சான்று நகல், திட்ட தொழில் அறிக்கை, இருப்பிடச் சான்று நகல், ஆதார் எண் நகல்,

பிணையம்

கடன் தொகை ரூ.1இலட்சம் வரை கோரும் பட்சத்தில், மனுதாரர் சுய உத்தரவாதம் மற்றும் பின் தேதியிட்ட காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன் தொகை ரூ.1 இலட்சத்திற்கு மேல் ரூ.5இலட்சம் வரை கோரும் பட்சத்தில் அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளில் பணிபுரிபவர்கள் உத்தரவாதம் (Gurantee) (அ) வருமான வரி செலுத்தும் ஒருவரின் பின் தேதியிட்ட காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன்தொகை ரூ.5 இலட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளில் பணிபுரியும் இருநபர்கள் உத்தரவாதம்(Gurantee) (அ) வருமான வரி செலுத்தும் இருநபர்களின் நிலத்தின் மதிப்பு கடன் கோரும் தொகைக்கு சமமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் அடமானம் (ம) பின் தேதியிட்ட காசோலை ஆகியவற்றை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த கடன் திட்டத்தில் தகுதியுள்ள சிறுபான்மை கைவினைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி விண்ணப்பப்படிவத்தை பெற்று விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

  • Share on

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 153-வது பிறந்த நாள் விழா - சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை!

வாழ்த்திற்கு மகிழ்ச்சி... உண்மையான கொண்டாட்டத்திற்கு கனிமொழி எம்பி வழிவகை செய்வாரா?

  • Share on