''கோவில் நிர்வாகிகள் தனக்கென தனி நிர்வாகம் நடத்துவது ஏற்புடையதல்ல; இது தேச விரோதிகள், நக்சலைட்டு போன்றோருக்கு நிகரான குற்றமாகும்,'' என, கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சதிகுமார் சுகுமாரகுருப் கருத்து தெரிவித்தார்.
திருச்செந்துார் சத்தியசீலன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருச்செந்துார் பரமன்குறிச்சி கிளகத்தியன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். இதற்கு வரி வசூல் செய்யப்படும். ஆனால் அதன் கணக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லை.
இதனால் பிரச்னை ஏற்பட்டு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தனியாக தசரா கோடை திருவிழா நடத்த அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அளித்தோம்; ஆனால் பரிசீலிக்கவில்லை. கோவில் நிர்வாகிகளான முருகன், சரவணன் தனக்கென தனி நிர்வாகத்தை நடத்துகின்றனர். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுகின்றனர். அவர்களே கூட்டங்கள் நடத்தி முடிவு எடுக்கின்றனர்.
எனக்கும் குடும்பத்தினருக்கும் நிர்வாகிகள் மிரட்டல் விடுக்கின்றனர். தசரா விழா நடத்த எங்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சதிகுமார் சுகுமாரகுருப் பிறப்பித்த உத்தரவு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்சபா, சட்டசபை இருக்கும் போது அதற்கு நிகராக நிர்வாகம் செய்வது ஏற்க முடியாது. இது தேச விரோதிகள், நக்சலைட் போன்றோருக்கு நிகரான குற்றமாகும்.
கோவில் நிர்வாகத்தினர் தனியாக நிர்வாகம் நடத்துவது குறித்து துாத்துக்குடி கலெக்டர் ஆய்வு செய்து தலைமை செயலர், உள்துறை செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நிர்வாகிகள் தனியாக நிர்வாகம் நடத்துவது குறித்து துாத்துக்குடி எஸ்.பி., உரிய விசாரணை நடத்த வேண்டும்.மனுதாரரின் மனு மீது திருச்செந்துார் தாசில்தார் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.