தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச கதிரியக்கவியல் தினம் கொண்டாடப்பட்டது.
வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த தினத்தின் நினைவாக 2012ம் ஆண்டு முதல் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச கதிரியக்கவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நுண் கதிர் துறை தலைவர் மருத்துவர் புளோரா நெல்சன் மற்றும் அத்துறை சார்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, நுண் கதிர் துறை தலைவர் மருத்துவர் புளோரா நெல்சன், நுண் கதிர் துறையை சார்ந்தவர்கள், நோயாளிகளுக்கு, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
மருத்துவத் துறையின் மைல்கல், உலக எக்ஸ்-ரே தினம் ஆகும். நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். உலகமே கொரோனா தொற்றினால் பரிதவித்த போது, இந்த துறை தான் மிகவும் மகத்தான பனி செய்து மக்களை காப்பாற்ற உதவியது என்பதை உலகம் அறியும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.
அதேபோல் நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும்.
வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றது. ஆகவே நமது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவிட மேலும் முனைப்புடன் பணி செய்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜான்சிரானி தொகுத்து வழங்கினார். தவமணி பீட்டர் வரவேற்புரை வழங்கினார். ஆசீர் சுந்தர்சிங் நோயாளிகளுக்கு உதவுதல் பற்றி சிறப்புறையாற்றினார். மருத்துவர் சரவணன் நன்றியுரையாற்றினார். மேலும், நுண் கதிர் துறை சார்ந்த மருத்துவர்கள், பணியாளாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.