வருவாய்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் சாகுபடி அடங்கல் கணக்கு பழைய நடைமுறையிலேயே வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் வெளீயீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் சென்னை மாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. டெல்டா பாசன வசதி உடைய மாவட்டங்கள் 11 மாவட்டங்கள் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்கள் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய மாவட்டங்களாகும். டெல்டா மாவட்டங்கள் ஆண்டுக்கு இருபோகமும், பிற மாவட்டங்களில் ராபி பருவத்தில் ஒரு போகமும் சாகுபடி செய்யக்கூடிய மாவட்டங்களாகும். விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை நிலங்களுக்கு நேரில் சென்று கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுப்பு செய்து நடப்பாண்டு சாகுபடி அடங்கல் புத்தகத்தில் பதிவு செய்வார்கள். அதன்பின் சாகுபடி பயிர்களை கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் சாகுபடி அடங்கல் பெறுவார்கள். இதுவே விவசாயிகள் பயிர் செய்ததற்கான அத்தாட்சியாக கருதப்படுகிறது.
சில விவசாயிகள் வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் சாகுபடி அடங்கல் பெற்று வங்கிகளில் கொடுத்து பயிர்க்கடன் பெறுவார்கள். தவிர விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளான கனமழை மற்றும் வறட்சியினால் மகசூல் பாதிப்பு ஏற்படும்போது அதனை ஈடுகட்டுவதற்கும், விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை கடந்த 2011 முதல் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் சாகுபடி அடங்கல் பெற்று இ சேவை மையங்களில் விண்ணப்பிப்பார்கள். இதனால் பயிர் சாகுபடி அடங்கல் இன்றைய கால கட்டத்தில் முக்கியமானதாகிவிட்டது.
அதனடிப்படையில் நிலவரி திட்டத்தின்படி அடங்கல் புத்தகத்தில் உள்ள சாகுபடி விபரங்களை வருவாய்துறையின் அகச்சிடப்பட்ட படிவத்தில் புல எண், பட்டாதாரர் பெயர், அனுபோகதாரர் பெயர், மொத்த பரப்பு, சாகுபடி பரப்பு, போகம்,விளைச்சல் என உரிய களத்தை பூர்த்தி செய்து பயிர் சாகுபடி அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகளிடம் அளிப்பார்கள்.
இப்பயிர் சாகுபடி அடங்கல் இந்தாண்டு முதல் பயிர் கணக்கெடுப்பை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு இ அடங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு வரை படிவத்தில் கைப்பட எழுதி வழங்கப்பட்ட அடங்கலில் பட்டாதாரர் பெயர், அதன் பின்னர் சாகுபடியாளர் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போதைய ஆன்லைன் இ அடங்கலில் சாகுபடி பெயருக்கு பதில் குத்தகைதாரர் என இடம் பெற்றுள்ளது.
சாகுபடியாளர் என்பது அவ்வப்போது மாறுதலுக்குரியதாகும். குத்தகைதாரர் என்பது நிலத்தின் உரிமையாளரும் குத்தகைதாரரும் ஒப்பந்தம் செய்துகொண்டு சாகுபடி செய்யக்கூடியதாகும். சாகுபடியாளர் பெயருக்கு பதில் குத்தகைதாரர் என பதிவு செய்தால் சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்ற சிக்கல்களை எந்தவொரு பட்டாதாரரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் இ அடங்கல் என்படும் பயிர் சாகுபடி அடங்கல் பட்டாதாரருக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் உழுது, பண்படுத்தி, விதைத்து, களை எடுத்து, மருந்து தெளித்து இயற்கை இடர்பாடுகளில் சிக்கி நஸ்டப்படும் சாகுபடி செய்பவர்கள் பயிர்காப்பீடு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை களைந்து பயிர் சாகுபடி அடங்கலில் குத்தகைதாரர் என்ற களத்தை நீக்கி சாகுபடி செய்பவர்கள் என்று மாற்றம் செய்ய வேண்டும் . அதுவரை புதிய இ அடங்கல் திட்டத்தை கைவிட்டு நடப்பாண்டும் பழைய நடைமுறைப்படி படிவத்தில் எழுதி அடங்கல் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.