நாகலாபுரம் ஊராட்சியில் அரசு கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்ல நகர பேருந்து வசதி செய்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக புதூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் திருச்செல்வி, தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
புதூர் ஒன்றியம் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். புதூர் ஒன்றியம், நாகலாபுரம் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் 20 ஏக்கர் நிலமும், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் "நமக்கு நாமே திட்டத்தில்" 16 வகுப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தை நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு கட்டி கொடுத்துள்ளார்கள்.
மத்திய மாநில அரசுகள் 7.5 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பு அறைகள், ஆய்வகங்கள். நூலகம். அலுவலக கட்டிடங்கள் அரசு கல்லூரிக்கு கட்டி கொடுத்துள்ளார்கள். உயர்கல்விதுறை நாகலாபுரம் கல்லூரியில் 7 இளநிலை பட்டபடிப்பு பாட பிரிவுகள், 3 முதுநிலை பட்டபடிப்பு பாடபிரிவுகளில் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இக்கல்லூரியில் ஆண்டுக்கு 150 175 மாணவர்கள் கூட சேரவில்லை. புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
இங்கு வேறு அரசு கல்லூரியோ. தனியார் கல்லூரியோ. பாலிடெக்னிக் கல்லூரியோ எதுவும் கிடையாது. 7 மேல்நிலை பள்ளிகள் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 1000 மாணவர்கள் மேற்படி பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதி வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தால் நாகலாபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ - மாணவிகள் சேர்க்கை மிக குறைவாக உள்ளது.
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேடபட்டி, அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, முத்துலாபுரம், கருப்பூர், வீரப்பட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி. மேலநம்பிபுரம். கீழ்நம்பிபுரம். வெம்பூர், மாவில்பட்டி, மெட்டில்பட்டி, காடல்குடி, லட்சுமிபுரம், மேலக்கல்லூரணி, ராமச்சந்திராபுரம், முத்தையாபுரம், ஜெகவீரபுரம். வாதலக்கரை, அயன்கரிசல்குளம், மிட்டாவடமலாபுரம் போன்ற 23 கிராம பஞ்சாயத்துகளுக்கு நாகலாபுரம் வந்து செல்ல பேருந்து வசதிகள் கிடையாது.
ஆனால் நாகலாபுரத்தில் இருந்து மேற்படி அனைத்து கிராமங்களுக்கும் பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தில் தரமான தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. புதூர் ஒன்றியத்தை சேர்ந்த 44 கிராம பஞ்சாயத்து மாணவ - மாணவியர்கள் நாகலாபுரம் அரசு கலை கல்லூரி மற்றும் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சென்று படிக்க காலை, மாலை நகர பேருந்து வசதி செய்துத்தர வேண்டும்.
நாகலாபுரம் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் புதூர் ஒன்றியம் இன்றுவரை தமிழகத்திலேயே உயர்கல்வியில் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக இருக்கிறது. எனவே மேற்படி தகவலை தமிழக அரசு / தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக நாகலாபுரம் அரசு கல்லூரி மற்றும் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து செல்ல உரிய பேருந்து வசதி செய்துத்தர கோரி 2022 அக்டோபர் 2-ம் தேதி நடந்த நாகலாபுரம் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் ஏற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாகலாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு படிக்க செல்ல நகர பேருந்து வசதி செய்துத்தர ஆவன செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.