கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 60வது மாதக்கூட்டம் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள என்.கே. மகாலில் நடந்தது.
கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் வினோபா தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பணி நிறைவு) அரிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மன்றக்காப்பாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள கீழாம்பல் ஊராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் இராமச்சந்திரனுக்கு மகிழ்வோர் மன்றத்தின் சார்பாக "கல்விச்செம்மல்" விருதும், நாகாலாபுரம் சாமி அய்யா மேல்நிலைப் பள்ளி, வேளாண்மை அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் என்பாருக்கு மகிழ்வோர் மன்றத்தின் "சாதனையாளர் விருது" வழங்கி பாராட்டப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு நகைச்சுவை துணுக்குகளை கூறி அசத்தினர். அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சன் தொலைக்காட்சி புகழ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "நாம் சிரித்தால் தீபாவளி" என்னும் தலைப்பில் மகிழ்வுரை ஆற்றினார். முடிவில் மன்றக்காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான் கணேஷ், மன்ற காப்பாளர்கள் சேர்மத்துரை, செல்வின், நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரபு, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன், தமிழாசிரியர் இராஜசேகர், கோவில்பட்டிக் கம்பன் கழக செயலாளர் சரவணசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.