தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் காலியாக உள்ள சுமார் 40 பணியிடங்களை நிரப்பக்கோரி அரசாணை பிறப்பிக்கப்பட்டும், மாவட்ட நிர்வாகம் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத சம்பவம், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் பலருக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அனைத்து மாவட்டங்களில் ஒட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை உரிய பணிவிதிகளையும், நியமன நடைமுறைகளையும் அரசாணைகளையும் பின்பற்றி நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும், கடந்த 19.4.2022 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரால் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில், ஒட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களில் சுமார் 40 பணியிடங்களில் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரால் 6 மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியும், காலி பணியிடங்களை நிரப்பாமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வரும் அலட்சிய நிலையானது, அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.
தூத்துக்குடியின் அருகாமையில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் காலம் தாழ்த்திவருவது ஏன் எனவும் கேள்விகள் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியமான செயல்பாடு, அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் தருவதோடு மட்டும் அல்லாமல் அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசாணை வெளியிட்டும் மாதக்கணக்கில் நிரப்பப்படாமல் இழுத்தடிக்க வேண்டிய நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவு படுத்துவதோடு, உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்போர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.