குளத்தூரில் இருந்து கல்லூரணி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்று பழுது ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான குளத்தூரில் இருந்து கல்லூரணி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில், அடையல் குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி மறுபகுதிக்கு செல்வதற்காக, சாலையில் மூன்று கண் பாலம் ஒன்று நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலத்தின் மேல் பகுதி பழுது ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடிய அபாய நிலை உள்ளது.
இந்த நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதினை, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பாலத்தின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ள பாலத்தினை, ஏதேனும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழும் முன் உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.