தூத்துக்குடி பாளை ரோடு எம்ஜிஆர் பூங்காவை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க விரைவில் பணிகளைத் துவக்கவிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஒரிரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், "தூத்துக்குடி மாநகரத் தந்தை" என அனைவராலும் போற்றப்படுகின்ற ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபமானது, மக்கள் புழங்கும் இடத்தில் சிறப்பாக அமைத்துத் தந்து அவரது நினைவை என்றென்றும் போற்றப்பட ஆவன செய்யப்பட வேண்டும் எனவும், ரோச் பூங்காவில் குருஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது உறவினர்கள், பரதர் நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில், இன்று (21.10.2022) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குருஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அவரது உறவினர்கள், பல்வேறு சமூக அமைப்பினருடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன்,
குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் ரோச் பூங்காவில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக விடுக்கப்பெற்ற கோரிக்கையை தொடர்ந்து, இன்று அவர்களிடம் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் இடம் தொடர்பாக கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அனைவரது ஆதரவோடும், தூத்துக்குடி பாளை ரோடு எம்ஜிஆர் பூங்காவை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.