திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, கைவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழி தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் பாலமுருகன்(33). திருமணமாகாதவர். சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இவர்களது வீட்டில் 27 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமுருகன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், பாலமுருகனின் தந்தை ஜெயராமனும், தாயார் பிரம்மசக்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த இளம்பெண்ணை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்து வீட்டு வேலைக்கு வராமல் நிறுத்தி விட்டனராம். இதையடுத்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி வழக்கு பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தார். மேலும் தலைமறைவான அவருடைய தந்தை, தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்.