முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு சங்க பொதுச்செயலாளரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி 135 பேர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.
பின்னர் உப்பு தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில்:
இந்த சங்கம் உருவாகிய காலத்திலிருந்து மறைந்த எனது தந்தை தொடர்ந்து பணியாற்றி தொழிலாளர்களின் தோழனாக வாழ்ந்து மறைந்தார். அவரது காலத்திற்கு பின்பு இந்த பொறுப்பேற்ற பின் கடந்த பல ஆண்டுகளாக இந்த பணியை நான் செய்து வருகிறேன். தொழிலாளர்கள் நலன் முக்கியம். அதே போல் முதலாளிகளின் நலனும் முக்கியம் என்று கருதி நாம் பணியாற்ற வேண்டும். முதலாளியும் தொழிலாளியும் இருகண்களைப் போன்றவர்கள். தொழிலாளர்கள் பணி செய்வதில் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உங்களது கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், என்னிடம் எப்போதும் தெரிவிக்கலாம். அதில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கு உங்களோடு எப்போதும் நான் இருப்பேன்.
தொழிலாளர்களுக்காக மறைந்த முதலமைச்சர் கலைஞர் பணியாற்றியதை போல், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா வகையிலும் தமிழகம் முன்னேற வேண்டும். தமிழக மக்களும் எல்லா வகையிலும் நலம் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு பணியாற்றி வரும் தமிழக அரசுக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் நயினார், மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் தலைவர் சுசி ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர் பிரபாகர் மற்றும் ஏராளமான உப்பள தொழிலாளர்கள் உடன் இருந்தனர்.