திருச்செந்தூர் கோவிலில் தங்கி பக்தர்கள் சஷ்டிவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அறங்காவல் குழு தலைவர் அருள்முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருப்பது வழக்கம். இந்த வருடம் பக்தர்கள் தங்கியிருக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து பாஜக உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகனிடம் கேட்டபோது "வழக்கமாக கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம். தற்போது பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் பொருள்கள் கோயில் பிரகாரத்தில்தான் வைக்கப்படுகிறது.
எனவே, சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்க கட்டிடங்கள் இடிக்கப்படும் இடங்களில் 13 தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்படுகிறது. அதில் பக்தர்கள் தங்க வைக்கப்படுவார்கள். அதில் 13000 முதல் 15000 பக்தர்கள் வரை தங்கலாம். பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக 150 குளியல் அறை மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே 170 கழிவறைகள் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.