விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி சீமைகருவேல மரங்களை அகற்றும் கும்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள சுமார் 355 ஏக்கர் நிலம் அக்கிராமத்தினை சேர்ந்த 2 சமூகங்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு மதுரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த இராணிமங்கம்மாள் காலத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுத்தது மட்டுமின்றி 2006ம் ஆண்டு உபரிநிலமாக அறிவித்து 8 ஏக்கர் ஊர் பொதுவிற்கும் என்றும், நிலம் இல்லாத சிலருக்கும் கொடுத்ததாகவும், மீதியுள்ள இடங்கள் சிப்காட் அமைக்க கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என்று கூறி இ.வேலாயுதபுரம் பொதுக்காடு டிரஸ்ட் செயலாளர் சாலமோன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் சிலர் அந்த நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் கடந்த சில மாதங்களாக அந்த நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்விபட்ட சாலமோன்ராஜ் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.