![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2022/10/07/1665134286.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14.08.2022 அன்று குலசேகன்ரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி புதுமனை தெருவை சேர்ந்த சுயம்பு என்பவரது மனைவி சுயம்புக்கனி (55) என்பவரை கொலை செய்து அவர் அணிந்திருந்த ½ பவுன் தங்க செயினை கொள்ளையடித்து சென்ற வழக்கில் உடன்குடி புதுமனை கீழத் தெருவை சேர்ந்த ஆத்தங்கரை முத்து மகன் அரசன் (56) என்பவரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் அரசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜனும்
கடந்த 14.09.2022 திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சங்கரன்கோவில் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த முருகையா மகன் மணிகண்டன் (38) என்பவரை மதுபாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரை சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தரம் (28), திருச்செந்தூர் சந்தான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் நாகராஜா (24) மற்றும் திருச்செந்தூர் ஜீவா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் ராஜா (23) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய நபர்களான சண்முகசுந்தரம் மற்றும் நாகராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரனும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உடன்குடி புதுமனை கீழத் தெருவை சேர்ந்த ஆத்தங்கரை முத்து மகன் 1) அரசன், வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரை சேர்ந்த சங்கர் மகன் 2) சண்முகசுந்தரம் மற்றும் திருச்செந்தூர் சந்தான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் 3) நாகராஜா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 214 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.