தூத்துக்குடியில் கானாமல் போன பள்ளி மாணவன் குறித்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில், அந்த மாணவனை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திரு.வி.க நகர் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவரது 14 வயது மகன் காலையில் பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலையில் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பல்வேறு பகுதிகளில் கானாமல் போன மாணவனை தேடியுள்ளனர். ஆனால், மாணவன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் இரவு சுமார் 10 மணி அளவில் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு படி, நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தலைமையில், முதல்நிலை காவலர் சங்கர், தனிப்பிரிவு காவலர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கானாமல் போன பள்ளி மாணவனை தேடும் பணியை போலீசார் உடனடியாக தொடங்கினர்.
மாணவன் பயிலும் பள்ளி, வீடு மற்றும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் உள்ள பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மாணவனை தேடும் பணியை தீவிரபடுத்தினர்.
இதனையடுத்து, இரவு சுமார் 11 மணி அளவில், மாணவன் பழைய நகராட்சி அலுவலக பகுதியில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவனை பத்திரமாக மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
புகார் அளித்த ஒரு மணிநேரத்தில் கானாமல் போன பள்ளி மாணவனை, தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கை நாதபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்டு பிடித்து, அச்சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த நிகழ்விற்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.