தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று காலை மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை விட இருமடங்கு கூடுதலாக அபராதம் விதிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசும் போது, தூத்துக்குடியில் உள்ள எரிவாயு தகன மேடை தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் எரிவாயு தகன மேடைக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தையோ அமல்படுத்த வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் நேரம் பொதுமக்களுக்கு வாய்ப்பாக உள்ள நேரமாக இருக்க வேண்டும். கூடுதல் குடிநீர் இணைப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் நேரம் தண்ணீர் வினியோகிக்க வேண்டும், சில பகுதிகளில் குடிநீர் திறந்தும் பல மணி நேரம் கழித்தும் தண்ணீர் வராமல் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்,
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து தினமும் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் மாநகராட்சிக்கு வருகிறது. காலை 4 மணிக்கு குடிநீர் வினியோகம் தொடங்குகிறது. இதில் தெற்கு மண்டலத்தில் உள்ள 9 நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 9 நீர்த்தேக்க தொட்டிகளில் 2 நாளுக்கு ஒருமுறையும், 5 தொட்டிகளில் 4 நாட்களுக்கு ஒருமுறையும், 7 தொட்டிகளில் 6 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அனைத்து பகுதியிலும் தினமும் குடிநீர் வினியோகிப்பதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி முழுவதும் 2 ஆயிரத்து 500 மின்விளக்குகள் தேவைப்படுகிறது. அவை கிடைத்த உடன் அமைக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.