தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது அபாண்டமான பலியை சுமத்துவதோடு, மீண்டும் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக முதலமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த நபர்களால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் மக்களை பாதுகாக்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இந்த அசம்பாவிதங்களுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசனுடைய ஒரு நபர் ஆணைய விசாரணை கமிட்டி, மிக தெளிவாக விளக்கி உள்ளது.
இது தொடர்பான உண்மை தன்மையை உலகறிய செய்த நீதியரசருக்கு ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை தன்மை இவ்வாறு இருக்க, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் என்ற மாய தோற்றத்தில் இருக்கக்கூடிய சில நபர்கள் தொடர்ந்து இந்த ஆலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும் அவதூறு பரப்பினவர்கள், பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர் சொன்னது போன்று, காற்று மாசு ஏற்படவில்லை என்பது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரின் காற்று மாசுபாட்டுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பது இந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் காற்று மாசுபடுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் சமீபத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) அறிக்கையில் தூத்துக்குடி காற்று மாசுபாட்டிற்கும் புற்று நோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது தூத்துக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குனரால் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே அரசு, அவதூறு பரப்பினவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். என தெரிவித்தனர்.