உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து தகுதி உள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து தகுதியுள்ள 3 ஆயிரத்து 896 உப்பளத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்கள் மழைக்கால நிவாரண நிதி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறும், நிவாரண நிதி கிடைக்கப் பெறாத தகுதியுள்ள தொழிலாளர்கள் (23.12.2021-க்கு முன்னர் பதிவு செய்து தற்போது வரை புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள்) தங்களின் நலவாரிய அட்டை, ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் (18.8.2022 வரை வங்கி கணக்கு புத்தகத்தை பதிவு செய்ய வேண்டும்) ஆகியவற்றை தூத்துக்குடி கோரம்பள்ளம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆவணங்களை ஏற்கனவே சமர்ப்பித்த தொழிலாளர்கள் மீண்டும் வழங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.