வைப்பார் கிராமத்தில் கால்வாய் மூலம் செல்லக்கூடிய, கழிவு நீரானது வீடுகளுக்குள் வருவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் ஊராட்சி கிராமத்தில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில், வைப்பார் கிராமத்தில் கழிவு நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக செல்லக்கூடிய கழிவு நீரானது வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தக்கூடிய சூழலை கொண்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்களின் வீடுகளுக்கு உள்ளே செல்லக்கூடிய கழிவு நீரால், வீடுகளில் வசிக்கக்கூடிய முதியவர்கள், குழந்தைகள் என பலருக்கும் நோய் தொற்று ஏற்படக்கூடிய நிலை உள்ளதாகவும், இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊரக பகுதிகளில், பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் பொருட்டு, அனைத்து ஊரக பகுதிகளிலும், " நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு முகாமை நடத்திடவும், இந்த முகாமிற்கு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நியமித்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், தற்போது பொதுமக்கள் முன் வைத்துள்ள, வைப்பார் கிராமத்தில் வீடுகளுக்குள் புகும் கழிவு நீர் புகார் மீது சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எந்தமாதிரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!