எட்டையாபுரம் அருகே இளம் தம்பதியினரை கொலை செய்த வழக்கில் பெண்ணின் தாய், தந்தை மற்றும் இதர வழக்குகளில் சம்மந்தபபட்ட 5 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25.07.2022 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரப்பட்டி சேவியர் காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜ் (28) மற்றும் அவரது மனைவி ரேஷ்மா (20) ஆகிய இருவரையும் குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் மேற்படி ரேஷ்மாவின் தந்தை எட்டையாபுரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்த சாமிதாஸ் மகன் முத்துக்குட்டி (44) மற்றும் அவரது மனைவி மகாலெட்சுமி (39) ஆகிய இருவரையும் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் முத்துக்குட்டி மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டையாபுரம் காவல் நிலைய ஜின்னா பீர்முகம்மதுவும்,
கடந்த 25.05.2022 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடைச்சிவிளை நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்த தவசிமணி மனைவி தாமரைபுஷ்பம் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த 3 ½ பவுன் தங்க தாலி செயினை கொள்ளையடித்து சென்ற வழக்கில் இடைச்சிவிளை குமரன்விளை பகுதியை சேர்ந்த திருமால்கரன் மகன் பிரபாகரன் (30) என்பவரை தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் பிரபாகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ்சும்,
கடந்த 20.06.2022 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை தாக்கி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தாளமுத்துநகர் கிழக்கு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் (42) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த்தும்,
கடந்த 29.07.2022 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்த காசி மகன் அரசமுத்து (62) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கில் அரசமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதாவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எட்டையாபுரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்த சாமிதாஸ் மகன் 1) முத்துக்குட்டி மற்றும் அவரது மனைவி 2) மகாலெட்சுமி, இடைச்சிவிளை குமரன்விளை பகுதியை சேர்ந்த திருமால்கரன் மகன் 3) பிரபாகரன், தாளமுத்துநகர் கிழக்கு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் 4) முருகன் மற்றும் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்த காசி மகன் 5) அரசமுத்து ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி மகாலெட்சுமியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை பெண்கள் சிறையிலும், மற்ற 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தபபட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.