ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செக்காரக்குடி செல்லும் அரசு டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கழக பணிமனையை பள்ளி மாணவிகள் முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் போக்குவரத்து வசதிக்காக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து காலை, மாலை நேரங்களில் கிராமப் பகுதிகள் வழியாக ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செக்காரக்குடிக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் வழியோர கிராமங்களான புதுப்பட்டி, மீனாட்சிபட்டி, எல்லநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி மக்கள், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அரசு பள்ளி மாணவிகள், செக்காரக்குடி செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மாலை 4.20 மணிக்கு பள்ளி முடிந்தாலும் இரவு 8 மணிக்கு பூவாணி செல்லும் பஸ்சில் ஊருக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவிகள் நலன் கருதி செக்காரக்குடி அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி முடிந்து நீண்டநேரம் காத்திருந்த மாணவிகள், நேற்று செக்காரக்குடி செல்லும் அரசு பஸ் வராததால் ஸ்ரீவைகுண் டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், போக்குவரத்து துறையினரிடம் பேசி மாற்று பேருந்து ஏற்பாடு செய்து மாணவிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.