சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நாளை ( ஆக.,15 ) பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாக, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்த படி 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேசிய தோழர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் ஆகஸ்ட் 15ம் தேதி 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாட உள்ளோம்.
ஆகஸ்ட் 15ம் தேதி 10க்கும் மேற்பட்ட அலங்கார வண்டியில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாற்று மற்றும் நமது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்ட வரலாறு பொருத்தப்பட்டு வாகனங்களில் தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு காங்கிரஸ் கட்சியினர் கைகளில் தேசிய கொடியினை ஏந்தி,பீச் ரோட்டில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்திராகாந்தி சிலையில் இருந்து புறப்படும் ஊர்வலத்தை மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள். ஊர்வலத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகிக்கிறார்.
காலை 9.30 மணிக்கு புறப்படும் ஊர்வலமானது, புதுதெரு வழியாக மட்டக்கடை வந்து சஞ்சய் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து,1ம் கேட் காந்தி சிலைக்கு மாலைக்கு அணிவித்தும், கதிரேசன் கோவில் தெரு, பாண்டுரங்கன் தெரு வழியாக 2ம் கேட், கீழ ரெங்கநாதன் தெரு வழியாக WGC ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் முடிவடைகிறது. என தெரிவித்துள்ளார்.