தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரைச் சேர்ந்த சந்தனமகாலிங்கம் என்பவரது மனைவி வீரசெல்வி, விளாத்திகுளத்தில் தனியார் ஷோரூமில் புதிய பைக் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்புகையில் சாலையில் தடுமாறி பைக் விபத்துக்குள்ளானதில் வீரசெல்வி உயிரிழந்தார். விபத்து குறித்து புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரைச் சேர்ந்த சந்தனமகாலிங்கம் என்பவரது மனைவி வீரசெல்வி(42). இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மதியம் விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் ஆட்டோஸ் என்ற யமகா ஷோரூமில் புதிய பைக் வாங்கியுள்ளார். புதிய இருசக்கர வாகனத்தினை வாங்கியதும் ஆசை, ஆசையாக எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.
புதூர் அருகே செங்கோட்டை விலக்கு பகுதியில் சென்ற போது திடீரென நிலை தடுமாறி புதிய இருசக்கரவாகனம் சாலையில் விழுந்தது. இதில் வீரசெல்வி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் வீரசெல்வியை மீட்டு புதூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு வீரசெல்வியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய பைக் வாங்கிய சிறிது நேரத்தில் விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.