தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் மற்றும் தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு இன்று தேசியக் கொடி வழங்கப்பட்டது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தினமணி மற்றும் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் பயிலும் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பி. பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்பிக் நிறுவன முதுநிலை மேலாளர் (நிர்வாகம்) ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ராணுவத்தில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் அதிகம் உள்ளது என்றும் அதுவே நம் நாட்டுக்கும், தூத்துக்குடி மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் வாழ்நாள் முழவதும் தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், ஸ்பிக் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்த கௌரி, உதவி அலுவலர் குணசேகரன், கே.டி. கோசல்ராம் பள்ளி செயலர் கனகமணி, பள்ளி குழுத் தலைவர் மூ. செல்லராஜகுமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பொட்டல்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, முள்ளக்காடு புனித அந்தோணியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.