தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ஜனவரி 19-ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
அதன்படி இதுவரை 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் மற்றும் ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன. 24வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பப்பட்டுள்ளது.