இந்தியா திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கும் திட்டம் நாளை மறுநாள் ( திங்கள்கிழமை ) தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சியானது மக்களுக்கான மாநகராட்சியாக திறம்பட செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களால், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். பெரியசாமியின் முழு முயற்சியினால் உருவானது. தொழில் நகரமான தூத்துக்குடி மாநகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியானது 14வருடங்களை கடந்து 15வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாநகராட்சியானது திமுக தலைமையிலான நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த விதமான மக்கள் நலப் பணிகளும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது மாநகரின் எதிர்கால நலன் மற்றும் மாநகரின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுத்திட தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மழைக்காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகள், முக்கிய ரோடுகள் உட்பட மாநகரின் எந்த பகுதிகளிலும் மழைநீர் நீண்ட நேரம் எங்கும் எவ்விடத்திலும் தேங்கிடாத வகையில் புதியதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதோடு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முழுமையாக தூர் வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் மழைநீர் ,கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் பக்கிள் ஓடையை முழுமையாக சீரமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியை குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றிட அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலான பணிகள் நாள்தோறும் தவறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்று, பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ் ஸ்டாண்ட், சிக்னல் சந்திப்புகள், பூங்காங்கள், மார்க்கெட், அரசு மருத்துவமனை வளாகம், முக்கிய ரோடுகள் உள்ளிட்ட மாநகரிலுள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் நவீன வடிவிலான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பைத்தொட்டிகளில் பொதுமக்கள் தாங்கள் போடும் குப்பைகளை ''மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள்'' என தரம் பிரித்து போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இன்னும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் எங்கும், எதிலும், எவ்விடத்திலும் குப்பைகளே இல்லாத தூய்மையான மாநகராட்சியாக மாற்றிட மாநகராட்சி பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ''எனது குப்பை எனது பொறுப்பு'' என்ற திட்டத்தை புதிய திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரால் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் மாதத்தில் 3, 4வது வார சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மாநகரிலுள்ள முக்கிய இடங்கள், பூங்காங்கள், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மாஸ் கிளினீங் என்ற பெயரில் குப்பைகளை அகற்றும் பணிகள் மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் பங்களிப்புடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி தொடங்கி 15வது ஆண்டை முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் நோக்கமான ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய குப்பைகளை சரியான இடத்தில் கொண்டு சேர்ப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக, மாநகரிலுள்ள குறிப்பிட்ட 20 பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு 50பேர் வீதம் மொத்தம் 1000 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு 'சுத்தம், சுகாதாரம், பிளாஸ்டிக்-பாலிதீன் ஒழிப்பு, சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் என்பதை மையமாக கொண்டு நடைபயணம், சைக்கிள் பேரணி, மினி மராத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.
மேலும் மாநகராட்சியின் 15வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநகரிலுள்ள முக்கிய இடங்களிலும், அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவசமான சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள்'' அமைக்கப்படுகிறது. இந்த நவீன கழிவறைகள் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது.
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளிலேயே தூத்துக்குடி மாநகராட்சியை அனைத்து துறைகளிலும் தன்னிறைவுடன் வளர்ச்சி பெற்ற தலை சிறந்த ''நம்பர் ஒன்'' மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
நமது இந்திய திருநாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. வார்டு வாரியாக பணியாளர்கள் வீடுவீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.