தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. குறிப்பாக மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அங்கு துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்று கூறி ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜனை இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மூன்று மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால் பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்தது. அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்திய போராட்ட காரர்களுக்கு சீனா பண உதவி செய்ததாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.