விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் முதல் மீனாட்சிபுரம் வரை உள்ள நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்து வரும் ரோடு பகுதிகளில் அறிவிப்பு பலகையுடன் கூடிய பெரிய இரும்பு கம்பிகள் 10 மற்றும் பிரதிபலிப்பான் கொண்ட இரும்பு கம்பிகள் 11 ஆகியவை நேற்று (04.08.2022) இரவு காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து மேற்படி விளாத்திகுளம் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் ஆத்தியப்பன் இன்று (05.08.2022) அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விளாத்திகுளம் வேம்பார் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (24), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, நரிப்பையூர் பகுதியை சேர்ந்தவர்களான சீனிமுத்து மகன் கருப்பசாமி (42) மற்றும் ராமசாமி மகன் ஆதி (42) ஆகிய 3 பேரும் மேற்படி நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் மேற்படி அந்தோணி ஜேம்ஸ், கருப்பசாமி மற்றும் ஆதி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 65,000 மதிப்புள்ள 21 இரும்பு கம்பிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 75 E 8128 (Tata Ace) என்ற சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.