செய்துங்கநல்லூரில் கனமழையினால் வீடு இடிந்து காயம் அடைந்த மூதாட்டிக்கு ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூர் முஸ்லிம் புது தெருவில் கேத்திர பாலன்மனைவி மீனாட்சி என்ற மூதாட்டி மட்டப்பா வீட்டில் வசித்து வருகிறார். செய்துங்கநல்லூர் பகுதியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 3.20 மணியளவில், மீனாட்சியின் மட்டப்பா வீடு சேதமடைந்துள்ளது. சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த மீனாட்சியின் தலைமேல் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், திருவைகுண்டம் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் நிவாரண உதவித்தொகை மற்றும் தனது சார்பாக மூதாட்டிக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிடுமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில், மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் ரூ.5ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருவைகுண்டம் வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று வழங்கினார்.