• vilasalnews@gmail.com

புதுக்கோட்டையில் பத்மநாபமங்கலம் குவாரி கருத்துக்கேட்பு கூட்டம்.. நடத்தது என்ன?

  • Share on

ஸ்ரீவைகுண்டம்  தாலுகா, பத்மநாபமங்கலம் கிராமத்தில், தனியார் நிறுவனம் மூலம், கல் மற்றும் சரள் குவாரி அமைப்பது சம்பந்தமாக, மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் சத்யராஜ், துாத்துக்குடி ஆர்.டி.ஓ., சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் செந்தில் வரவேற்றார். தாசில்தார் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்குவாரி அமைய உள்ள பகுதியான பத்ம நாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை உள்ளிட்ட கிராம மக்கள்,  சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த கருந்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒவ்வொருவராக தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

அப்போது பேசிய ஒரு தரப்பை சேர்ந்த சிலர், கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகளின் படிப்புகளுக்கு பல்வேறு வழிகளில் குவாரி உரிமையாளர்கள், உதவுகிறார்கள். இங்கு குவாரி அமைந்துள்ளதால் குடிசை வீடுகளாக இருந்த எங்கள் பகுதி கான்கிரீட் வீடுகளாக தற்போது மாறியுள்ளது. இங்கு குவாரி அமையப்பெற்றால் சுமார் 200 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும்  வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த குவாரியால் கிராமங்களில் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே இந்த குவாரி அமைய வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தனர். 

அப்போது,  குவாரிக்கு ஆதரவாக பேசிய ஒருவர் " குவாரி அமைக்க நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். ஒருவேளை குவாரி அமையாமல் போனால், கிராம மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூற, குவாரி வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்தை மட்டும் கூறுங்கள். அதைவிட்டு தேவையில்லாமல் பேசக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கண்டிக்க, உடனடியாக, அந்த நபர் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, தொடர்ந்து பேசினார்.

சிறு, குறு தொழிற்சங்கமான துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், மற்றும் பில்டர் அசோசியேசனை சேர்ந்தோர் பேசுகையில், 

முன்பு பக்கத்து மாவட்டங்களில் உள்ள கல்குவாரியில் இருந்து கட்டுமான தேவைக்கான பொருட்களை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள், கட்டுனர்கள் வாங்கும் போது உள்ள செலவுகளை விட, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கட்டுமான தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கான செலவு குறைவாகிறது. இதனால் பொதுமக்கள், கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் பயனடைகின்றனர்.

மேலும், தொழில் நகரமான நமது தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைய உள்ளன. அத்தகைய தொழில் நிறுவனங்களின் கட்டுமான தேவைகளுக்கு, கல்குவாரியில் இருந்து பெறப்படும் கட்டுமான பொருட்களான கற்கள், உற்பத்தி மணல் உள்ளிட்டவைகளை கல்குவாரிகள் பூர்த்தி செய்கின்றன. ஆகவே, இங்கு கல்குவாரிகள் அமைய வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளதால், கல்குவாரி அமைக்கப்பட்ட வேண்டும் என அதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஸ்ரீ மூலக்கரையை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பன், நாம் தமிழர் கட்சி வேல்ராஜ், உடன்குடி குணசீலன் மற்றும் மற்றொரு தரப்பு கிராம பொதுமக்கள் பேசுகையில்,

கல்குவாரியில் குறிப்பிட்ட அளவை தாண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம் பொருட்களை எடுத்துச்செல்கையில், தார்பாய்களை கட்டாமல் எடுத்துச்செல்கின்றனர். இதனால் லாரிகளில் இருந்து பறந்து செல்லக்கூடிய கற்களின் தூசிகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. அதே போல் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் அப்பகுதிகளில் சாலைகள் சேதமடைவதோடு, விபத்துகளும் ஏற்படுகிற நிலை அங்குள்ளது. 

குவாரி அமைய இருக்கும் இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே வல்லநாடு வெளிமான்கள் சரணாலயம் அமைந்துள்ளதால், வனவிலங்குகளுக்கும், சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. அதுபோல வல்லநாடு மலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நிலையும் உருவாகும். 

மேலும், குவாரி அமைய இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலே தொகுப்பு வீடுகள் பல உள்ளன. எனவே, கல்குவாரியால் இந்த தொகுப்பு வீடுகளும், அதில் குடியிருப்பவர்களும் பாதிக்கப்பட கூடும். மேலும், குடியிருப்புக்கு மிக அருகில் கல்குவாரி அமைப்பது சட்ட விரோதம் ஆகும். என தெரிவித்தனர்.

மேலும், கல்குவாரிக்கு ஆதரவாக இக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள், அவர்களுக்கு என்னவென்றே தெரியாமல், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அது குறித்த வீடியோ பதிவு எங்களிடம் உள்ளது. மேலும், அவர்கள் கையில் உள்ள மனுவானது, ஒருநபர் கைப்படவே எழுதப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது.

கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பேச அதிக நேரம் வாய்ப்பு வழங்கியதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, கூட்டமானது கூச்சல், குழப்பத்தோடு பரபரப்பானது. எல்லோரையும் அமைதியாக இருக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்ள, கூச்சல் குறையாததால், மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இருந்து எழுந்து செல்ல முற்பட்டார். அதனையடுத்து, அனைவரும் அமைதியானார்கள், அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக கானப்பட்டது.

பின்னர், அனைவரிடமும் எழுத்துபூர்வமான மனுக்கள் பெறப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.

  • Share on

கபடி போட்டி - வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்!

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐஜேகே அறவழி ஆர்ப்பாட்டம்!

  • Share on