திருச்செந்தூர் கோயிலில் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை கோயில் அர்ச்சகர்கள் சிலர் சிறப்பு தரிசன பாதை வழியாகவும், முதியோர் தரிசன பாதை வழியாகவும் தரிசனம் செய்ய அழைத்துச்சென்றதைக் கண்டித்த காவலர்களை அர்ச்சகர்கள் தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு சாமியை தரிசிக்க இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டணப் பாதை என இருவழியில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு செல்லும்வகையில் தனியாக தரிசன பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரிசன பாதையில் முதியோர் அமர்ந்து செல்லும்வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு தரிசன பாதை வழியாகவும், முதியோர் தரிசன பாதை வழியாகவும் பக்தர்களை அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து அங்கு பணிக்கு நின்ற காவலர்கள் சிலர் அர்ச்சகர்களைக் கண்டித்ததோடு, அவர்கள் அனுமதித்த பக்தர்களையும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பத்துக்கும் அதிகமான அர்ச்சகர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அர்ச்சகர்கள் காவலர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, காவல்களை அர்ச்சகர்கள் தாக்கவும் முற்பட்டனர். இதனால் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தவறை தட்டிக்கேட்ட போலீசுக்கே இந்த நிலைமையா? அர்ச்சகர்களின் இது போன்ற அராஜகம், அட்டூழியத்தால் கோவில் நிர்வாகம் மட்டுமின்றி, கோவிலின் புனிதத்திற்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது. அர்ச்சகர்களின் இது போன்ற அராஜகத்திற்கு ஆரம்பத்திலேயே அரசும், கோவில் நிர்வாகமும் முடிவுகட்டவில்லை என்றால், எதிர்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு அவை வழிவகுக்கும் என பக்கதர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.