தூத்துக்குடியில் திருடுபோன ரூ.43 லட்சம் மதிப்புள்ள டிரைலர் டேங்கர் லாரியை போலீசார் மீட்டனர். திருடிய நபரை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மோகன ரெங்கன் மகன் அய்யனார் (39) என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சிமெண்ட் மற்றும் நிலக்கரி கொண்டு செல்வதற்கு தனது லாரிகளை கான்டிராக்ட் அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த (28.04.2022) அன்று ரூ.43 லட்சம் மதிப்புள்ள தனது டிரைலர் லாரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக சென்ற லாரி திருடுபோனது தற்போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அய்யனார் நேற்று அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அய்யனாருடைய லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக் (32) என்பவர் டிரைலர் லாரியை திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி திருடப்பட்ட லாரி முத்தையாபுரம் பகுதியில் லாரியின் மேல் உள்ள டேங்கர் இல்லாமல் லாரி மட்டும் நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக போலீசார் டேங்கர் இல்லாத லாரியை கைப்பற்றினர்.
மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். கார்த்திக் மீது தூத்துக்குடி மத்தியபாகம், தென்பாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.