தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் பெருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை தந்து உள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், சொந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார். அவருக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஆகையால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்