தூத்துக்குடியில் ஆஷ் துரை நினைவிடம் புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி அமைப்பினர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து, புதிய மாநகராட்சியில் அலுவலகத்தில் ஆணையரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் ஆஷ்துரை நினைவிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. சிலர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டும் வருகின்றனர்.
நம் நாட்டிற்காக போராடிய வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணிமண்டபம், நினைவு சின்னம் இல்லை. ஆனால் ஆஷ் துரைக்கு இவ்வளவு செலவு தேவையா என வாதங்களும் நடந்து வருகிறது.
"வஉசி, வாஞ்சி நாதன் தேச பணியை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த ஆஷ் துரை நினைவிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது என, ஆஷ் துரை நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிக்கு, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆஷ் துரை நினைவிடம் புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக் குழு சக்திவேலன் ஆகியோர் முன்னிலையில் இந்து முன்னணி அமைப்பினர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து, புதிய மாநகராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
அப்போது, தூத்துக்குடி நகர காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் இந்து முன்னணி அமைப்பினரை தடுத்து நிறுத்தி, ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என மறுத்து, அவர்களை பேருந்துக்களில் ஏற்றிச் சென்று , மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். அதனையடுத்து, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ யிடம், ஆஷ்துரை மணி மண்டபத்தை புதுப்பிக்கும் பணியை நிறுத்தக்கோரி, இந்து முன்னணி அமைப்பினர் மனு அளித்தனர்.
இதில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, சிவலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், சரவணகுமார், மாரியப்பன், நாராயண ராஜ், ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிபு சுடலை செல்வம், ராஜா, செல்வம் , மேற்கு மண்டல பொறுப்பாளர் சுடலை, கவின் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் l, நெல்லை சுடலை, விமல், சுரேஷ், சங்கர்,சேவாபாரதி மாநிலச் செயலாளர் வெண்ணிமலை,பிராமண சங்கம் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பத்திரிக்கையாளர்களுக்கு கெடுபுடி
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் இந்து முன்னணி அமைப்பினர் மனு கொடுக்கும் நிகழ்வை படம் பிடிக்க, செய்தி சேகரிக்க காவல்துறையினர் மற்றும் ஆணையர் உதவியாளர் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை, ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கவே, " இந்து முன்னணினர் " செய்திகளுக்கு இவ்வளவு கெடுபுடி ஏன்? என இந்து முன்னணியினரும், பத்திரிக்கையாளர்களும், வாக்குவாதம் செய்ய, பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதித்தால் மட்டுமே மனு கொடுக்க உள்ள செல்வோம், இவ்விடத்தை விட்டு நகர்வோம் என இந்து முன்னணி நிர்வாகிகள் கூற, மூன்று பத்திரிக்கையாளர்களை மட்டும் ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.