ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரையில் இன்று, அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை. இதை முழுமைப் பெற்ற நாள் என்பார்கள் பெரியோர்கள். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் என்பது சிறப்பு.
ஆக, இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பையும் முக்கியத்துவம் பெறும். இந்த அற்புத நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம்.
ஆடி அமாவாசை தினத்தில் கடல் அல்லது புனித நதி, ஆறு, நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் நம் பாவங்கள் நீங்கி நற்கதி அதாவது விமோசனம் அடைய முடியும் என்பது நம்பிக்கை.
மறைந்துவிட்ட தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரையில் இன்று, அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர். இதனால், இன்று புதிய துறைமுகம் கடற்கரைக்கு மக்கள் வருகையை தொடர்ந்து, கூட்டம் அதிக அளவில் கானப்பட்டது.