தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, வழிப்பறி, போக்சோ சட்டத்தில் கைதான 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ராமர் மகன் செல்வக்குமார் (வயது 32). சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ரஞ்சித்குமார் (29). இவர்கள் 2 பேரையும் கயத்தாறு போலீசார் ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர். தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் ராஜபாண்டி (22). இவரை சிப்காட் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர் தாதன்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வீரமுத்து மற்றும் அருணாச்சலம் மகன் மூர்த்தி (20) ஆகிய 2 பேரையும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த 5 பேரும் பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டு உள்ளனர். குண்டர் சட்டம் பாய்ந்தது இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வக்குமார், ரஞ்சித்குமார், ராஜபாண்டி, வீரமுத்து, மூர்த்தி ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 7 பேர் உட்பட 153 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.