தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே போல, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இன்று தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( Holy Cross Girls Hr.Sec.School) , நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வகுமார், மற்றும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.