ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்க காதணி, மண்டை ஓடு உள்ளிட்ட அனைத்து எலும்பு கூடுகள், தங்க நெற்றி ப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3 மீட்டர் ஆழத்தில் நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருளும், இதன் மீது நெல்லின் உமி படிமங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நெல்லின் படிமங்கள் இந்தியாவிலேயே முதல் முதலில் ஆதிச்சநல்லூரில் தான் கிடைத்துள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். 3 மீட்டர் ஆழமான குழியில் இறங்கி நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த குழியில் உள்ள 135 செமீ நீளம் கொண்ட இரும்பால் செய்யப்பட்ட பாதாள கரண்டி எனப்படும் பொருளை பார்த்தார். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் பொருட்கள் கிணறுகளில் தவறி விழுந்தால் அதை எடுப்பதற்கு இந்த பாதாள கரண்டியை பயன்படுத்தி உள்ளதாக அகழ்வராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.